×

3வது முறை பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை கள்ளக்குறிச்சி மாணவி தந்தையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் இறந்த பிளஸ் 2 மாணவியின் உடல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் மறுபிரேத பரிசோதனை நடந்தது. இந்நிலையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் ராகுல் ஷியாம் பண்டாரி, “மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனையின் போது முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதில் குளறுபடிகள் உள்ளது.

மேலும் எங்களது தரப்பில் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முன்னதாக நிராகரித்து விட்டது. முக்கியமாக மறுபிரேத பரிசோதனை குறித்த எந்த விவரங்களையும் எங்களுக்கு தரவில்லை. அதனால் நீதிமன்றம் எங்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்,” அனைத்து தகவல்களும் மாணவியின் தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேண்டுமென்றே அதனை நிராகரித்து விட்டனர். உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட மருத்துவ குழுவும் மறுபிரேத பரிசோதனையை சரியான முறையில் நடத்தி முடித்துள்ளது. இதில் தவறான வாதங்கள் முன்வைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையடுத்து “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏன் உங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா?” என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராகுல்,”மறுபிரேத பரிசோதனை நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை வழங்க வேண்டும். மூன்றாவதாக மறுபிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், “மாணவியின் உடலை குடும்பத்தார் பெற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும்” என்றார். ஆனால் இருவரின் கோரிக்கையும் ஏற்க மறுத்த நீதிபதி பி.ஆர்.கவாய், எந்த கோரிக்கை என்றாலும் உயர்நீதிமன்றத்தை அணுகியே நிவாரணம் கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

Tags : Kallakurichi ,Supreme Court , Kallakurichi student's father's appeal seeking 3rd postmortem examination dismissed: Supreme Court orders
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...